சென்னை சர்தார் பட்டேல் சாலை விரிவாக்கம் - டெண்டர் கோரியது தமிழக அரசு

30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.
சென்னை,
சென்னை சர்தார் பட்டேல் சாலை தற்போது நான்கு வழிச் சாலையாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையில் பயணம் செய்யும் நிலையில், காலை மற்றும் மாலை நேரங்களில் இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. கிண்டியில் இருந்து அடையாறு, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சூழலில், நகர வளர்ச்சி திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மாநகர மேம்பாட்டு நிறுவனம் (CMDA) மற்றும் பொதுப்பணித் துறை (PWD) இணைந்து சர்தார் பட்டேல் சாலையை நான்கு வழியில் இருந்து ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டமிட்டது. இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், சென்னை அடையாறு-கிண்டியை இணைக்கும் சர்தார் பட்டேல் சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்வதற்கு நெடுஞ்சாலை துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டரை கிலோமீட்டர் நீளத்திற்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






