சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மீதமுள்ள பகுதியை இடிக்கும் பணி தீவிரம்

சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மீதமுள்ள பகுதியை இடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. பாதுகாப்பாக இன்று தரைமட்டமாக்க திட்டமிட்டு உள்ளனர்.
சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் மீதமுள்ள பகுதியை இடிக்கும் பணி தீவிரம்
Published on

சென்னை,

சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீ விபத்தில் உருக்குலைந்ததால் அதை இடிக்கும் பணி 2-ந் தேதி தொடங்கியது. முகப்பு கட்டிடத்தின் ஒரு பகுதியை நேற்று முன்தினம் இடிக்கும் போது சரிந்து விழுந்தது. கட்டிடத்தின் மீதமுள்ள பகுதி நேற்று தரைமட்டமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் நேற்று 17-வது நாளாக இடிக்கும் பணி நடந்தது. கட்டிடத்தை இடிக்க தேவையான உயரம் கிடைக்காததால் காலையில் இருந்து கட்டிடத்துக்கு அருகில் இடிக்கப்பட்ட கற்கள், மணல்களை கொண்டு உயரப்படுத்தும் பணி நடைபெற்றது. ஆனால் உயரப்படுத்தும் பணி நிறைவடையாததாலும், இரவு நேரத்தில் கட்டிடத்தை இடிப்பது பாதுகாப்பாக இருக்காது என்பதாலும் கட்டிடத்தை இடிக்கும் பணி நேற்று ஒத்திவைக்கப்பட்டது.

கட்டிடத்தை இடிக்க உயரத்தை அதிகப்படுத்த அனைத்து பணிகளையும் நேற்று இரவு தயார்நிலையில் வைத்திருந்தனர். இன்று(திங்கட்கிழமை) காலை கட்டிடத்தின் மீதமுள்ள பகுதியை பாதுகாப்பாக தரைமட்டமாக்க தனியார் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.

இதுகுறித்து இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் 90 சதவீதம் கட்டிடங்கள் இடிக்கப்பட்டுவிட்டன. மீதமுள்ள முகப்பு கட்டிட பகுதியை மிகவும் பாதுகாப்பாக இடிக்க வேண்டும். ஏனெனில் அந்த பகுதியை இடிக்கும்போது கட்டிடத்துக்கு முன்பு இருக்கும் மேம்பாலம் மீதோ, அருகில் இருக்கும் கடைகள் மற்றும் குடியிருப்புகள் மீதோ விழுந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் இருக்கிறோம். அதனால் தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணி இன்று முடிவடையும் என எதிர்பார்க்கிறோம் என்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com