

சென்னை,
அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று பொதுமக்கள் தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளில் இ-கே.ஒய்.சி. (e-kyc) பதிவு சிறப்பு முகாம் ஆகஸ்ட் 2-ந்தேதி(நாளை) நடைபெற உள்ளது. இது தொடர்பாக சென்னை மண்டல கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
“அனைத்து குடும்ப அட்டைதாரர்களும் தங்கள் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கைவிரல் ரேகையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். தற்போது வரை கைவிரல் ரேகையை பதிவு செய்யாதவர்கள் ஆகஸ்ட் 2-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமிற்கு சென்று தங்களது கைவிரல் ரேகையினை பதிவு செய்திட வேண்டும்.
பணி நிமித்தமாக வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர்கள் இப்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைக்கு சென்று தங்கள் கைவிரல் ரேகையை பதிவு செய்யலாம்.
எனவே, அரசின் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விரல் ரேகைப் பதிவை விடுதலின்றி முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.