

கரூர்,
கரூர் ராமானுஜம் நகர் வாய்க்கால் மேடு பகுதியிலுள்ள ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் ராஜா (வயது 48). இவர் கரூர்-கோவை ரோட்டிலுள்ள மின்வாரிய அலுவலகம் அருகே தள்ளு வண்டியில் பழக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
இவருடைய மனைவி சுந்தரி (40). இவர்களுடைய மகள் ராகவி (16), மகன்கள் ரஞ்சித் (14), ரகு (13). ராகவி சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். வேடமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி ரஞ்சித் 9-ம் வகுப்பும், ரகு 8-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் அக்டோபர் 7-ந் தேதி கனமழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் சார்பில் ரெட் அலர்ட் அறிவிப்பு வெளியிடப்பட்டதால், ராஜா தனது மகள் ராகவியை, கடந்த சில நாட்களுக்கு முன்பு கரூருக்கு அழைத்து வந்தார்.
மின் இணைப்பு துண்டிப்பு
இதற்கிடையே ஜே.ஜே.நகரில் உள்ள ஒரு மின்கம்பத்தில் வயர்கள் ஒன்றோடு ஒன்று உரசி தீப்பொறி கிளம்பியதால் அங்குள்ள பல்வேறு வீடுகளுக்கு மின்வினியோகம் தடைபட்டது. பின்னர் அது சரிசெய்யப்பட்டு வீடுகளுக்கு மின்வினியோகம் வழங்கப்பட்டது.
ஆனால் ராஜா வீட்டின் மின் இணைப்பு பெட்டியில் கோளாறு இருந்ததால் அவரது வீட்டுக்கு மின்வினியோகம் கிடைக்கவில்லை. இதனால் இரவில் மின்விசிறி இயங்காததால் புழுக்கத்தில் தூங்க முடியாமல் அவதிபட்ட ராகவி, இது குறித்து தனது தந்தையிடம் கூறி வருத்தப்பட்டார்.
இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனது பழக்கடையில் இருந்த ஜெனரேட்டரை ராஜா தனது வீட்டுக்கு எடுத்து வந்து, அதன் மூலம் ஒரு மேஜை விசிறிக்கு மட்டும் இணைப்பு கொடுத்தார். பின்னர் சொந்த வேலை காரணமாக ராஜா சென்று விட சுந்தரி, அவரது மகள் ராகவி ஆகியோர் கதவை லேசாக மூடிவிட்டு வீட்டுக்குள் தூங்கினர்.
மூச்சு திணறி சாவு
மண்எண்ணெய் மூலம் இயங்கிய ஜெனரேட்டரில் இருந்து இரவு முழுவதும் கரும்புகை வெளியேறி கொண்டிருந்தது. அப்போது வீட்டின் வாசல் அருகே டேபிள் பேன் சுற்றியதால், ஜெனரேட்டர் புகையானது வீட்டினுள் பரவியது. அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததால் சுந்தரியும், ராகவியும் இதை உணரவில்லை. ஒரு கட்டத்தில் வீடு முழுவதும் புகை மண்டியது. இதனால் மூச்சுதிணறல் ஏற்பட்டு சுந்தரி, ராகவி ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
நேற்று காலை ராஜா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, தனது மனைவி, மகள் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சென்ற கரூர் டவுன் போலீசார் 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.