கை எலும்பு முறிவிற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை மாணவி உயிரிழப்பு

சுபஸ்ரீ, குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கை எலும்பு முறிவிற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற சென்னை மாணவி உயிரிழப்பு.
மாணவி உயிரிழப்பு
Published on: 

சென்னை,

சென்னை குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவிற்காக சிகிச்சை பெற அனுமதி அளிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கையில் எலும்பு முறிவு

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (வயது 19). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் கணினி அறிவியல் 2-ம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 21-ந்தேதி அன்று சுபஸ்ரீயின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள எலும்பு முறிவு கட்டும் இடத்தில் கட்டு கட்டினார். எனினும் சரியாகாமல் கையில் வலி அதிகமானது.

அறுவை சிகிச்சை

சுபஸ்ரீ, குரோம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே ஸ்கேன் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவிக்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே கை சரியாகும் என மருத்துவர்கள் கூறினர். பின்னர் மாணவிக்கு கை எலும்பு முறிவிற்கான அறுவை சிகிச்கை செய்யப்பட்டது. எனினும், மாணவி ஆஸ்பத்திரியிலேயே இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

மாணவி உயிரிழப்பு

இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு மாணவிக்கு நுரையீரல் பிரச்சனையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று (சனிக்கிழமை) அதிகாலையில் மாணவி உயிரிழந்ததாக குடும்பத்தாரிடம் தெரிவித்தனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவர்களின் தவறான சிகிச்சையே இந்த உயிரிழப்புக்கு முக்கியக் காரணம் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் போராட்டம்

கையில் ஏற்பட்ட சாதாரண எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவிக்கு, முறையான கவனத்துடனும் தகுந்த மருத்துவ நெறிமுறைகளுடனும் சிகிச்சை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டினர். மருத்துவர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதோடு, நியாயம் கிடைக்கும் வரை உடலை வாங்கப் போவதில்லை என போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, மாணவியின் மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com