

சென்னை,
ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா ரெயில் நிலைய யார்டில் 48 நாட்களுக்கு மேம்பாட்டு பணிகள் நடைபெற உள்ளதால், சென்னை - திருப்பதி இடையிலான விரைவு ரெயில் உள்பட சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரலில் இருந்து திருப்பதிக்கு தினமும் மாலை 4.35 மணிக்கு புறப்படும் விரைவு ரெயிலும், திருப்பதியில் இருந்து சென்ட்ரலுக்கு காலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரெயிலும் டிசம்பர் 1-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
இதற்கிடையே, தாம்பரத்தில் இருந்து மேற்கு வங்காள மாநிலம் சந்திரகாச்சிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. தாம்பரத்தில் இருந்து வரும் 13, 20, 27-ந் தேதிகளில் காலை 10.15 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சியை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் சந்திரகாச்சியில் இருந்து வரும் 14, 21, 28-ந் தேதிகளில் இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரெயில், 3-வது நாள் காலை 10.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த சிறப்பு ரெயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது.
மேலும், கும்மிடிப்பூண்டி - கவரைப்பேட்டை இடையே ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் இந்த மாதம் நடைபெற உள்ளன. இதனால், சில ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி காலை 11.35 மணி ரெயில், சூலூர்பேட்டை - சென்ட்ரல் காலை 11.45 மணி ரெயில், சென்ட்ரல் - சூலூர்பேட்டை மதியம் 12.10 மணி ரெயில், கும்மிடிப்பூண்டி - சென்ட்ரல் மதியம் 1 மணி ரெயில் ஆகியவற்றின் சேவையில் வரும் 7, 9, 11, 14, 16, 18, 21, 23, 25, 28 மற்றும் 30-ந் தேதிகளில் ஒரு பகுதியில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல், சூலூர்பேட்டையில் இருந்து சென்ட்ரலுக்கு மதியம் 12.35 மணிக்கு புறப்படும் ரெயில், மேற்கண்ட தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. ரெயில் பாதை மேம்பாட்டு பணிகள் காரணமாக இந்த சேவை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.