சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-

தென்மேற்கு பருவமழை கேரளம் பகுதிகளில் அடுத்த 2 அல்லது 3 தினங்களில் துவங்கக்கூடும்.

சுமார் 1.5 கிமீ உயரம் வரை தெற்கு கேரளம் மற்றும் அதனை ஒட்டிய தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 3.1 கிமீ முதல் 7.6 கிமீ உயரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது.

சுமார் 1.5 கிமீ உயரம் வரை கிழக்கு விதர்பா முதல் தெற்கு கேரளம் பகுதிகள் வரை தெலுங்கானா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் புதுவை வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று (2-06-2026): தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22 மாவட்டங்களில் மழை

நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு, சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

104 டிகிரி பாரன்ஹீட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (02-06-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இதன்படி சென்னையில் 104 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளது.

இதனிடையே இன்று (செவ்வாய்கிழமை) காலை 10 மணி வரை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலியில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

100° பாரன்ஹீட்

தமிழகத்தில் 10 இடங்களில் நேற்று 100° பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் விவரம் வருமாறு:-

வேலூர் - 104.9° பாரன்ஹீட் (40.5°C)

சென்னை மீனம்பாக்கம் - 104.18° பாரன்ஹீட் (40.1°C)

திருத்தணி - 103.1° பாரன்ஹீட் (39.5°C)

சென்னை நுங்கம்பாக்கம் - 102.2° பாரன்ஹீட் (39.0°C)

பாளையங்கோட்டை - 102.2° பாரன்ஹீட் (39.0°C)

தஞ்சாவூர் - 102.2° பாரன்ஹீட் (39.0°C)

மதுரை நகரம் - 101.84° பாரன்ஹீட் (38.8°C)

நாமக்கல் - 101.48° பாரன்ஹீட் (38.6°C)

கரூர் பரமத்தி - 101.3° பாரன்ஹீட் (38.5°C)

மதுரை விமான நிலையம் - 101.3° பாரன்ஹீட் (38.5°C)

X

Daily Thanthi
www.dailythanthi.com