

சென்னை,
சென்னையில் நேற்று முன்தினம் மாலை வேளையில் பல இடங்களில் மழை பெய்தது. நேற்றைய தினம் பகலில் வெயில் சுட்டெரித்தாலும், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து தொடங்கி மழை கொட்டத் தொடங்கியது. குறிப்பாக வடசென்னை பகுதிகளில் மழையின் தீவிரம் சற்று அதிகமாக இருந்தது.
இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. மேகவெடிப்பு போல் 3 மணி நேரத்தில் அதிக மழைப்பொழிவு பதிவானது. அதிகபட்சமாக கத்திவாக்கத்தில் 3 மணி நேரத்தில் 26 செ.மீ. மழை பெய்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்றும் கனமழை தொடர வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. செயற்கைக்கோள் படங்களில் அடர்ந்த மேகக் கூட்டங்கள் தென்படுவதால் மழைப்பொழிவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல சுழற்சி காரணமாக வட கடலோர பகுதிகளில் புதிய மேகக் கூட்டங்கள் உருவாகி வருவதாகவும், இதன் காரணமாக சென்னையில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.