

சென்னை,
பெரியபாளையம் அருகே ஆட்டோ மீது லாரி மோதிய பயங்கர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றபோது இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்தவர் லோகநாதன் (42). ஆட்டோ ஓட்டுநராக இருந்தார். இவரது மனைவி பூங்கொடி (39), மகள் தனலட்சுமி (10), மாமியார் ராதா (65), மைத்துனர் மகன்கள் கோகுல் (10), பிரசாந்த் (15) ஆகியோர் நேற்று இரவு பெரியபாளையம் கோவிலுக்கு சாமி கும்பிட ஒரே ஆட்டோவில் சென்றனர்.
லோகநாதன் ஆட்டோவை ஓட்டிச் சென்றார். அவர்களது ஆட்டோ பன்பாக்கம் பகுதியில் உள்ள எம்.டி.சி. பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்தது.
இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த மற்றவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆட்டோ ஓட்டுநர் லோகநாதனின் மாமியார் ராதா மற்றும் மைத்துனர் மகன் கோகுல் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது.
விபத்தில் படுகாயம் அடைந்த மேலும் 3 பேருக்கு பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல்சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெரியபாளையம் கோவிலுக்கு வழிபாட்டுக்காகச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.