சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு

சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும் என்றும், அங்கு நூலகம் மற்றும் ஆய்வரங்கம் அமைக்கப்படும் என்றும் நேரில் ஆய்வு செய்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் புனரமைக்கப்படும்: அமைச்சர் எ.வ.வேலு
Published on

ஆய்வு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து பகுதிகளையும் நேற்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, முதன்மை தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.

பராமரிப்பு இல்லை

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழர்களின் அடையாள சின்னமாக விளங்கும் வள்ளுவர் கோட்டம் 1974-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந்தேதி முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டி முடிக்கப்பட்டது. 40 ஆண்டுகள் முடிந்த நிலையில் தமிழனின் பண்பாட்டு அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டார்கள். மாணவர்களின் நலனுக்காக சமச்சீர் கல்விகொண்டு வந்தபோது பாடப்புத்தகத்திலிருந்த திருவள்ளுவரின் படத்தை கூட எடுத்துவிட்டார்கள்.3,500 பேர் அமரக்கூடிய மிகப் பெரிய அரங்கத்தை கூட பராமரிக்காமல் தரைதளம், மேல்தளம், படிக்கட்டுகள் அனைத்தும் உடைந்து சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. 5.5 ஏக்கர் பரப்பளவுள்ள இவ்வளாகத்தில் 68,275 சதுரஅடியில்

கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இங்குள்ள தேர் திருவாரூர் தேர் மாதிரியை வைத்து 106 அடி உயரத்திலும், தேரின் சக்கரங்கள் 14 அடி உயரத்திலும், திருவண்ணாமலையிலிருந்து வரவழைக்கப்பட்ட வைரக்கல் என்ற கல்லால் வடிவமைக்கப்பட்டது. இங்கு கழிவறை மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட வருகை தரும் மாணவர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இல்லை. இதை சீர்ப்படுத்தி புனரமைப்பு செய்திட பொதுப்பணித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர், முதன்மை தலைமைப் பொறியாளர், தோட்டக்கலை வல்லுனர்கள் ஆகியோருடன் ஆய்வு செய்துள்ளேன்.

புதுப்பிக்க நடவடிக்கை

பளிங்குக்கல்லில் பதிக்கப்பட்ட அனைத்து திருக்குறளும் படிக்க முடியாத நிலையில் சேதமடைந்துள்ளது. அடிப்படை வசதிகள், மின்வசதி, கழிவறை மற்றும் தண்ணீர் வசதி, வர்ணம் பூசுதல் மற்றும் பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து புனரமைப்பு செய்ய மதிப்பீடு தயார் செய்யுமாறு உத்திரவிட்டுள்ளேன். இங்குள்ள அரங்கம் புதுப்பிக்கப்படும்போது நூலகம் மற்றும் ஆய்வரங்கம் தனியாக அமைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். இங்கு புதுப்பிக்கப்படும் கூட்ட அரங்கு பொது நிகழ்ச்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும். இதுகுறித்த ஆய்வறிக்கை விரைவில் முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அனுமதி பெற்று வள்ளுவர் கோட்டம் மீண்டும் புதுப்பிக்க நடவடிக்கை

எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com