

சென்னை,
விசிக நிர்வாகி பட்டப்பகலில் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியை சேர்ந்த அன்பழகன் என்ற மைனாக்குட்டி இவர் விசிக நிர்வாகியாக இருந்து வருகிறார் . இவர் இன்று அதே பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர்கள் அவரை சரமாரியாக வெட்டி தப்பி ஓடிவிட்டனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் 108-க்கு அழைப்பு விடுத்தனர். இதனையடுத்து அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்து உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட அன்பழகன் மீது 3 கொலை வழக்குகள் உள்ளதாகவும், இதன் காரணமாக முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.