

சென்னை,
இந்திய அரசின் பாதுகாப்புப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் வெளியிட்டுள்ள தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் உள்ள வெற்றிப் போர் நினைவிட வளாகத்தில், பயன்பாட்டிலிருந்து ஓய்வுபெற்ற டி-55 பிரதான போர் டாங்கி ஒன்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மேடையில் பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன், இந்திய கடற்படைக் கப்பல்களான ஐ.என்.எஸ். விக்ராந்த், ஐ.என்.எஸ். அஞ்சதீப் ஆகியவற்றின் மாதிரிகளும் இவ்வளாகத்தில் இடம்பெற்றுள்ளன.
விரைவில், ஒரு மிக்-21 ரக போர் விமானம் உயர்பீடத்தின்மேல் நிறுவப்பட்டு இந்த நினைவிடம் மேலும் மேம்படுத்தப்படும். கூடுதலாக, இந்திய கடலோரக் காவல்படையின் கடல்சார் மற்றும் வான்சார் சொத்துக்கள், இந்த ராணுவ பாரம்பரிய வளாகத்தின் ஒரு பகுதியாக காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிப் போர் நினைவிடத்தை ஒரு அழகிய இராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக இவை அமைகின்றன. இந்திய பாதுகாப்பு படைகளின் வீரம், தியாகம் மற்றும் சிறப்பான சேவையை நினைவுகூரும் நோக்கில், கவனமாகத் திட்டமிடப்பட்ட தொடர் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
புகழ்பெற்ற மெரினா கடற்கரை மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டைப் பகுதி சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த நினைவிடம், தேச சேவைக்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க ஆண்களுக்கும் பெண்களுக்கும் அஞ்சலி செலுத்தும் பாரம்பரிய நினைவுச்சின்னமாக திகழ்கிறது.
முதலாம் உலகப் போரின்போது (1914–1918) நேச நாடுகளின் வெற்றியை நினைவுகூரும் வகையில் இது முதலில் கட்டப்பட்டது. பின்னர், இரண்டாம் உலகப் போருக்குப் (1939–1945) பிறகு, இரண்டு உலகப் போர்களின்போதும் தங்கள் உயிரைத் தியாகம் செய்த பழைய மதராஸ் மாகாணத்தைச் சேர்ந்த வீரர்களின் நினைவாக, இது வெற்றிப் போர் நினைவிடம் என அர்ப்பணிக்கப்பட்டது.
பல தசாப்தங்களாக, இந்த வெற்றிப் போர் நினைவிடம் அதன் தன்மையிலும் முக்கியத்துவத்திலும் பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த நினைவகம் முதலில் முதலாம் உலகப் போரை நினைவுகூரும் கல்வெட்டுகளை மட்டுமே கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போர் மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்தில் இந்திய ஆயுதப் படைகள் பங்கேற்ற அனைத்து முக்கியப் போர்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகளை உள்ளடக்கும் வகையில் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தேசத்திற்குச் சிறப்பாகப் பணியாற்றிய இந்திய ராணுவ வீரர்கள், கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களின் துணிச்சல், வீரம் மற்றும் உன்னத தியாகத்தைப் போற்றும் ஒரு தேசிய அஞ்சலியாக இந்த நினைவகம் விளங்குகிறது.
அண்மையில் மெரினா கடற்கரையோரத்தில் இரண்டு முக்கிய இடங்களில் புகழ்பெற்ற செஞ்சுரியன் டாங்கிகளை வெற்றிகரமாக நிறுவியதைத் தொடர்ந்து, இந்திய ராணுவத்தின் தெற்குப்பகுதி தலைமையகம் வெற்றிப் போர் நினைவகத்தை, இராணுவப் பாரம்பரியம், தேசியப் பெருமை ஆகியவற்றின் ஒரு துடிப்பான மையமாக மேம்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. இந்த முயற்சி, இந்திய ஆயுதப் படைகளின் பெருமைமிக்க பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, இராணுவத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தவும் முயல்கிறது.
தமிழ்நாடு அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நெருங்கிய ஒத்துழைப்பு மற்றும் ஆதரவின் மூலமே வெற்றிப் போர் நினைவிடத்தின் உருமாற்றம் சாத்தியமாகியுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பீடங்கள், மேடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் அவர்கள் மிகுந்த ஒத்துழைப்பை அளித்தனர்.
இந்தியாவின் கவசப் போர் வாகன (AFV) உற்பத்தியில் சென்னை ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. கனரக வாகனத் தொழிற்சாலை (HVF), ஆவடி இயந்திரத் தொழிற்சாலை (EFA), போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (CVRDE) மற்றும் அதனுடன் தொடர்புடைய தர உறுதி அமைப்புகளை உள்ளடக்கிய கவச வாகன நிறுவனம் சென்னையில் அமைந்திருப்பதுடன், வரலாற்றுச் சிறப்புமிக்க ஆவடி ஆயுதக்கிடங்கும் இங்கு அமைந்துள்ளது. 1941-ல் இந்திய ராணுவத்தின் பீரங்கிகளுக்கான முக்கிய கிடங்காக உருவாக்கப்பட்ட இக்கிடங்கு, புதிதாகத் தயாரிக்கப்பட்ட மற்றும் சீரமைக்கப்பட்ட கவச வாகனங்கள் மற்றும் உபகரணங்களைப் பெறுதல், வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் நாடு முழுவதும் உள்ள இராணுவப் பிரிவுகளுக்கு அனுப்பி வைப்பதில் ஒரு முக்கியப் பங்காற்றுகிறது. இந்த நிறுவனங்கள் சென்னையை இந்தியாவின் கவசப்படை திறனின் தொட்டிலாக மாறியுள்ளன.
மெரினா கடற்கரையோரம் இரண்டு முக்கிய இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள செஞ்சுரியன் டாங்கிகள், இந்திய ராணுவத்தின் கவசப் படை வரலாற்றில் மிகச் சிறந்த அத்தியாயங்களில் ஒன்றை நினைவுகூர்கின்றன. 1965-ஆம் ஆண்டு இந்திய-பாகிஸ்தான் போரின்போது, குறிப்பாக வரலாற்றுச் சிறப்புமிக்க அசல் உத்தர் போரில், செஞ்சுரியன் டாங்கிகள், எதிரியின் நவீன கவச வாகனங்களுக்கு பெரும் தோல்வியைப் அளிப்பதில் தீர்க்கமான பங்காற்றின. இதன் விளைவாக, அந்தப் போர்க்களம் 'பத்தான் நகர்' என்ற அழியாத புகழைப் பெற்றது.
தற்போது போர் நினைவுச்சின்னத்தில் பொருத்தப்பட்டுள்ள டி-55 போர்க் கவச வாகனம், இந்தியாவின் கவசப் போர் வரலாற்றில் மற்றொரு புகழ்பெற்ற அத்தியாயத்தைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக, டி-55 டாங்கியானது இந்திய ராணுவத்தின் கவசப்படையின் முதுகெலும்பாகத் திகழ்ந்தன.
ஐஎன்எஸ் விக்ராந்தின் மாதிரி வடிவம், இந்தியக் கடற்படையின் புதிய, உள்நாட்டிலேயே கட்டப்பட்ட விமானம் தாங்கி கப்பலை குறிக்கிறது. இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், பாதுகாப்பு உற்பத்தித் துறையில் நாட்டின் வளர்ந்து வரும் தன்னிறைவையும், உலக தரம் வாய்ந்த சிக்கலான போர்க்கப்பல்களை வடிவமைத்து உருவாக்கும் அதன் குறிப்பிடத்தக்க திறனையும் அடையாளப்படுத்துகிறது. ஐஎன்எஸ் அஞ்சதீப்பின் மாதிரி வடிவம் இந்தியாவின் உற்பத்தித்திறனை எடுத்துக்காட்டுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.