சென்னை: போலீஸ் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு

கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை: போலீஸ் நிலையம் முன் தீக்குளித்த தொழிலாளி உயிரிழப்பு
Published on

சென்னை,

சென்னை புளியந்தோப்பு திரு.வி.க.நகர் 7-வது தெருவை சேர்ந்த ராஜன் (வயது 42). இவர் நேற்று முன்தினம் இரவு ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்த நிலையில், போலீசார் தனது புகாரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், தன்னை அடித்து துன்புறுத்துவதாகவும் கூறி போலீஸ் நிலையம் முன்பு பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக்கொண்டார். அதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளித்த ராஜனுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், அவர் கொருக்குப்பேட்டை கருமாரியம்மன் நகரில் சொந்தமாக இரும்பு பட்டறை நடத்தி வந்தது தெரியவந்தது. தற்போது தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அங்குள்ள கம்பெனியில் கூலி வேலை செய்து வந்த நிலையில், அங்கு பணிபுரிந்து வரும் மாதவன் என்பவருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, மாதவன் மற்றும் அவரது நண்பர் அருண்குமார் ஆகியோர் சேர்ந்து ராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது

இதுதொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில், புகார் கொடுக்க ராஜன் வந்த நிலையில், அங்கிருந்த போலீசார் நடந்தவற்றை புகாராக எழுதிக்கொடுக்குமாறு கூறி திருப்பி அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன வேதனையடைந்த ராஜன் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழிலாளி ராஜனை தாக்கியதாக அளித்த புகாரின் பேரில், கொருக்குப்பேட்டை ரெயில்வே காலனி சி.பி.ரோட்டை சேர்ந்த அருண்குமார் (26) என்பவரை கைது செய்து நடவடிககை எடுத்தனர். தலைமறைவான மாதவனை போலீசார் தேடி வருகின்றனர்.

இதையடுத்து போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற ராஜன் ஜார்ஜ் டவுன் 15-வது நீதிமன்ற நடுவர் பிரான்சிஸ் சாமுவேல் ராஜனிடம் மரண வாக்குமூலம் அளித்தார். இந்த நிலையில், ராஜன் நேற்று மாலை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com