

சென்னை,
சென்னையில் உலகிலேயே மிக உயரமான 47.8 அடி உயர பிரம்மாண்ட கொலு அமைக்கப்பட்டு, புதிய உலக சாதனை படைக்கும் முயற்சி தற்போதைய நவராத்திரி திருவிழாவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெரம்பூரில் அமைந்துள்ள புகழ்பெற்ற எஸ்.பி.ஆர். சிட்டி வளாகத்தில், 'எஸ்.பி.ஆர். சிட்டி நவராத்திரி உத்சவம் 2026'-ன் ஒரு பகுதியாக இந்த கொலு திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இக்கொண்டாட்டத்தின் முதன்மை ஈர்ப்பாக இந்த கொலு அமையவுள்ளது.
லண்டனை சேர்ந்த புகழ்பெற்ற வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்புடன் இணைந்து, இந்த கொலு அமைப்பின் உயரத்தை அடிப்படையாக கொண்டு புதிய உலக சாதனை முயற்சியாக இந்த 47.8 அடி உயர கொலு முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சாதனைக்கான அங்கீகாரம், அந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ சரிபார்ப்புக்கு பின் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த 47.8 அடி உயரத்தை தேர்ந்தெடுத்ததற்கு பின்னால் எஸ்.பி.ஆர். சிட்டியுடன் தொடர்புடைய காரணம் உள்ளது. இந்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வளாகத்தில் 47 தளங்களை கொண்ட குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது. இது சென்னை நகரின் மிக உயரமான குடியிருப்பு வளாகமாக குறிப்பிடப்படுகிறது.
இதற்கு முன்னதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு சென்னையில் அமைக்கப்பட்ட 36.4 அடி உயர கொலுவே மிக அதிகபட்ச உயரமாக 'இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' அமைப்பால் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது பெரம்பூரில் அமைக்கப்பட்டுள்ள 47.8 அடி உயரக் கொலு, அந்த பழைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை நோக்கி பயணிக்கிறது.
இந்த கொலுவை எண்ணற்ற பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்து வருகின்றனர்.