

சென்னை
சென்னையில் கோயம்பேடு அருகே தனியார் மதுபான பார் ஒன்று உள்ளது. இன்று விடுமுறையை முன்னிட்டு நேற்றிரவு ஆடல், பாடலுடன் இந்த பாரில் நிகழ்ச்சி நடந்தது. இதில், மது அருந்தி விட்டு நடனம் ஆடியபோது, இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இந்த தகராறு மோதலாக உருமாறியுள்ளது.
இதனால், அந்த இரு தரப்பினரும் பாரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இளம்பெண் யான்சி மற்றும் பாலகுரு இருவரும் வெளியேற்றப்பட்டனர். அப்போது, பாலகுருவின் கார் கண்ணாடியை யான்சி கல் வீசி தாக்கி விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளார் என கூறப்படுகிறது. இரு தரப்பினரும் சாலையிலும் மோதி கொண்டனர்.
இந்த நிலையில், அந்த இளம்பெண் பாரை விட்டு வெளியேறி, தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, அவரை அந்த கும்பல் காரில் பின்னால் துரத்தியது. காரில் 6 பேர் இருந்துள்ளனர்.
இதில், அந்த இளம்பெண் சென்ற வாகனம் மீது காரை கொண்டு அந்த கும்பல் மோதி உள்ளது. இந்த விபத்தில் இளம்பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். அவருடன் சென்ற 17 வயது சிறுமி படுகாயமடைந்து உள்ளார். விபத்து ஏற்படுத்தி விட்டு காரில் வந்த கும்பல் தப்பி சென்று விட்டது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டனர். போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. விபத்தில் மரணமடைந்த அந்த இளம்பெண் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த யான்சி (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது. காரை கொண்டு மோதி விபத்து ஏற்படுத்திய கும்பலை போலீசார் தேடினர்.
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், பார் உரிமையாளர் பாலாஜி என்பவரிடம் விசாரணை நடந்தது. இதன் தொடர்ச்சியாக காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தி, படுகொலை செய்த சுமன் சக்திவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சுமன் சக்திவேல் ஓட்டிய காரில் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளது. இதேபோன்று பாலாஜி மற்றொரு அரசியல் கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இதில், சிறுமிகளை பாரில் அனுமதித்தது எப்படி? என பார் நிர்வாகத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.