

சென்னை,
காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் பவனை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடைபெற்றது.
போராட்டத்துக்கு கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் து.வெ.வேணுகோபால் உள்பட ஏராளமானோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இந்தியன் ஆயில் பவனை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் மாலையில் விடுவித்தனர்.
மெரினாவில் 29-ந்தேதி போராட்டம்
ஆர்ப்பாட்டத்தின் போது தி.வேல்முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். கடந்த ஓராண்டில் பெட்ரோல் விலை 25 ரூபாய் அதிகரித்துள்ளது. எனவே, பெட்ரோல், டீசல் விலைகளை பெட்ரோலிய நிறுவனங்களே தினம் தினம் நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பையும் ரத்துசெய்ய வேண்டும்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வருகிற 29-ந்தேதி மாலை 3 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில் அமைதி வழியில், அறவழியில் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.