

சென்னை,
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள ஒரு வங்கியின் தலைமை மேலாளர், 4-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
சென்னை ராஜாஜி சாலையில் செயல்பட்டு வரும் ஒரு வங்கியில் ஐ.டி. விங் தலைமை மேலாளராக வேலை செய்து வந்தவர் கனிஷா பாஜ்பாய் (57 வயது). உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரைச் சேர்ந்த இவர், சென்னையில் தனது மனைவி மது, மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல் வேலைக்கு வந்தார். மாலையில் திடீரென வங்கியின் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த கனிஷா பாஜ்பாய், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் மற்றும் வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வடக்கு கடற்கரை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக பூக்கடை போலீஸ் துணை கமிஷனர் கோபி, வடக்கு கடற்கரை போலீஸ் உதவி கமிஷனர் வேல்முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கனிஷா பாஜ்பாய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக கனிஷா பாஜ்பாய், தனது மனைவியிடம் செல்போனில் நீண்டநேரம் பேசி உள்ளார் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. எனவே மனைவியிடம் விசாரித்தால்தான் அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.