சேப்பாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது

சென்னை சேப்பாக்கத்தில் மத்திய பா.ஜனதா அரசை கண்டித்து கே.எஸ்.அழகிரி தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேப்பாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் - கே.எஸ்.அழகிரி தலைமையில் நடந்தது
Published on

சென்னை,

மத்திய பா.ஜனதா ஆட்சியின் பொருளாதார சீரழிவு மற்றும் மக்கள் விரோத செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தலைமை தாங்கினார்.

இதில், முன்னாள் மத்திய மந்திரி கே.வி.தாஸ், தமிழக பொறுப்பாளர்களும், தேசிய செயலாளர்களுமான சஞ்சய் தத், ஸ்ரீவல்ல பிரசாத், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, முன்னாள் எம்.எல்.ஏ. பீட்டர் அல்போன்ஸ், விஜயதரணி எம்.எல்.ஏ. மற்றும் நாசே ராமச்சந்திரன், கே.சிரஞ்சீவி, கோபண்ணா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்களில் சிலர் விலைவாசி உயர்வை கண்டித்து கியாஸ் சிலிண்டர் மற்றும் வெங்காயத்தை தலையில் சுமந்தபடி பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் கே.எஸ்.அழகிரி பேசியதாவது:-

சுதந்திர போராட்டத்தில் நேரு 14 ஆண்டுகளும், காமராஜர் 11 ஆண்டுகளும் சிறையில் இருந்தார்கள். பா.ஜனதா தலைவர்களில் யாராவது ஒருவர் ஒரு மணி நேரம் சிறையில் இருந்தார்கள் என்று சொல்ல முடியுமா? எனவே, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்காத ஒரு கட்சி நாட்டை ஆளுகிறது என்றால் அதற்கு காரணம் நாம்(காங்கிரஸ்) தான். நமது இளைஞர்களுக்கு சுதந்திரம் பெற்ற வரலாறு தெரியவில்லை. நாம் இளைஞர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லாமல் விட்டுவிட்டோம்.

மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, இந்தியாவிற்கான விருதை பெறுவதற்கு எதிர்க்கட்சியை சேர்ந்த எல்.கே.அத்வானியை ஐ.நா.சபைக்கு அனுப்பினார். ஆனால் இன்று அவர்கள் நம் தலைவர்களை திகார் சிறைக்கு அனுப்புகிறார்கள். ப.சிதம்பரம் 90 நாட்களாக சிறையில் இருக்கிறார்.

மத்திய பா.ஜனதா அரசு பொதுத்துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் போன்றவற்றை விற்பனை செய்ய இருக்கிறார்கள். பொதுத்துறை நிறுவனங்கள் இல்லாவிட்டால் நாடு சூறையாடப்படும். இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மராட்டிய மாநில கவர்னர் சிவசேனா கட்சிக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 3 நாட்கள் அவகாசம் கொடுக்கவில்லை. சரத்பவாருக்கு 24 மணி நேர அவகாசம் வழங்கிவிட்டு, 12 மணி நேரத்தில் அதை திரும்பப்பெற்றார். ஆனால், பா.ஜனதாவுக்கு 20 நாட்கள் அவகாசம் கொடுத்து தேசியவாத காங்கிரசை உடைத்து சரத்பவார் குடும்பத்தில் பிரிவினையை ஏற்படுத்தி இருக்கிறார்.

நாம் ஒரு மோசமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. சமூக நீதி ஒழிக்கப்படுகிறது. மீண்டும் வேறுபாடுகள் உடைய சமுதாயம் வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். நினைக்கிறது. நாம் செயல்பட ஆரம்பித்தால் தமிழகம், கேரளா போன்று எல்லா இடங்களிலும் வெற்றி பெற முடியும். எனவே, அனைவரும் கடினமாக உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com