கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி

மகாபலிபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஜோதி, இன்று காலை கன்னியாகுமரி வந்தடைந்தது
கன்னியாகுமரி வந்தடைந்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி
Published on

கன்னியாகுமரி:

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28-ம் தேதி முதல் அடுத்த மாதம் 10-ந்தேதி வரை சென்னை மகாபலிபுரத்தில் நடக்கிறது. இதன் ஒரு பகுதியாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த செஸ் ஒலிம்பியாட் ஜோதி பயணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இந்த செஸ் ஒலிம்பியாட்ஜோதி பயணம் கடந்த மாதம் தொடங்கி இந்தியா முழுவதும் 75 நகரங்களுக்கு கொண்டு செல்லும் வகையில் எடுத்து வரப்பட்ட இந்த ஜோதி தமிழ்நாட்டுக்குள் கோவை மாநகரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

கோவையில் இருந்து இந்த ஜோதி கன்னியாகுமரி கடற்கரை சாலையில் அமைந்து உள்ள காந்தி நினைவு மண்டபத்துக்கு இன்று காலை வந்தது. கிராண்ட் மாஸ்டர் நிலோபர்தாஸ் ஊர்வலமாக எடுத்து வந்தார்.

மத்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம், நேரு யுவகேந்திரா சங்கேதன், தமிழ்நாடு மாநில செஸ் சங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழகம் சார்பில் ஜோதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ஜோதி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சென்றது. அங்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், ராஜ கண்ணப்பன், மனோ தங்கராஜ் ஆகியோர் வரவேற்றனர்.

அதன் பிறகு ஜோதி திருவள்ளுவர் சிலை வளாகத்துக்கு எடுத்துச் செல்லப் பட்டது. அங்கு அந்த ஜோதியை வீரர் மற்றும் வீராங்கனைகள் சிலையை சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர். கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் மாணவர் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் இந்த ஜோதியை வழியனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சர்வதேச நடுவரும் குமரி மாவட்ட செஸ் விளையாட்டு கழக செயலாளருமான வின்ஸ்டன் வரவேற்று பேசினார். பின்னர் செஸ் ஒலிம்பியாட் ஜோதி தஞ்சாவூருக்கு எடுத்து செல்லப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com