சிதம்பரம் நடராஜர் கோவில்: புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் - அறநிலையத்துறை தகவல்

பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் என்று அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில்: புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் - அறநிலையத்துறை தகவல்
Published on

சென்னை,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னதி அமைந்துள்ளது. இங்கு நடராஜருக்கு மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் தரிசன திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரமோற்சவம் நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் உள்ள கொடிமரம் பல ஆண்டுகளாக வெயில், மழையால் சேதமடைந்து இருப்பதால், அதற்கு பதிலாக புதிய கொடிமரம் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாக அறங்காவலர் சுதர்சன் மற்றும் பட்டாச்சாரியார்கள் முடிவு செய்தனர். இதற்காக நேற்று கொடி மரத்திற்கு படையல் செய்து வழிபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் ஒன்று திரண்டு, தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் நிர்வாகிகளிடம் இக்கோவிலில் பிரமோற்சவம் நடத்துவது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதனால் இங்குள்ள கொடி மரத்தை புதுப்பிக்கவோ, மாற்றவோ கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில், சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் சன்னிதானத்தில் புதிய கொடிமரம் நடுவதற்கு தடை விதித்து சிதம்பரம் சார்பு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன் உத்தரவிட்டார். மேலும் 15 நாட்களுக்கு புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். நீதிபதியின் உத்தரவை ஏற்று கொடிமரம் நடும் நிகழ்வை அறநிலையத்துறை அதிகாரிகள் கைவிட்டனர்.

இந்நிலையில் பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் அமைக்கப்படும் என சென்னை ஐகோர்ட்டில் இந்து சமய அறநிலையத்துறை உறுதி அளித்துள்ளது. புதிய கொடிமரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரிஹரன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் அறநிலையத்துறை இந்த பதிலை வழங்கி உள்ளது. 

இதன்படி சேதமடைந்த பழைய கொடி மரத்தை அகற்றி விட்டு புதிய கொடி மரம் மட்டுமே அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரம்மோற்சவம் நடத்துவது தொடர்பான வழக்கு வேறொரு அமர்வில் விசாரணையில் உள்ளது. தற்போதைக்கு பிரம்மோற்சவம் நடத்தப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான இந்து அறநிலையத் துறையின் வாதத்தை மனுவாக தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com