

சென்னை,
சிதம்பரம் நடராஜர் கோவிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்கவில்லை என்றுகூறி, கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் நிர்வாகக் குழுவை அமைத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீதேறி, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதித்து, தமிழ்நாடு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பொது தீட்சிதர்கள் உள்பட பலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். அதேபோல, தமிழ்நாடு அரசின் இந்த அரசாணையை ஆதரித்தும் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், இ.மனோகரன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டிருந்ததாவது:-
சிதம்பரம் கோவிலின் நிர்வாகத்தை பொது தீட்சிதர்களிடம் ஒப்படைத்து கடந்த 2014-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்த பிறகு. கோவில் முறையாக நிர்வகிக்கப்படவில்லை. எனவே, கோவில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதிகள் வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார் ஆகியோரை நியமிக்கிறோம். இதில், வி.பாரதிதாசன் தலைவராகவும். ஆர்.சுரேஷ்குமார் துணைத் தலைவராகவும், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜேந்திரன் உறுப்பினராகவும், பொது தீட்சிதர்கள் சங்கத்தின் செயலாளர், இந்துசமய அறநிலையத்துறைச் செயலாளர் ஆகியோரை அலுவல் சாரா உறுப்பினர்களாகவும் நியமித்து உத்தரவிடுகிறோம்.
கோவிலுக்குள் பொது தீட்சிதர்கள் மேற்கொண்ட தொடர் கட்டுமானங்களால் புராதன கட்டிடங்களுக்கு பெருத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதனால், கோவிலின் புராதனக் கட்டிடங்களுக்கு இடையூறாக அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள தேவையற்ற கட்டிடங்களை அப்புறப்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு புராதனச் சின்ன ஆணையத்துடன் கலந்தாலோசித்து நீதிபதிகள் தலைமையிலான நிர்வாகக் குழு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்த குழு ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் சொத்துகளை மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்துகளைக் கணக்கு எடுத்து, மாயமான மதிப்புமிக்க கோவிலுக்கு சொந்தமான பொருள்களை மீட்கவும், கோவில் சொத்துகளின் வாடகை குத்தகை பாக்கியை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றுக்கு முறையான கணக்குகளை பராமரிப்பதுடன், கோவிலின் வருமானத்தைப் பெருக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த 12 ஆண்டுகளாக, கோவிலுக்கு வந்த வருமானம் குறித்த முழு கணக்கை பொது தீட்சிதர்கள் சமர்ப்பிக்கவில்லை. கோவிலை பொது தீட்சிதர்கள் முறையாக நிர்வகிக்காதது வேதனை அளிக்கிறது. புராதன கட்டிடங்களுக்குச் சேதம் ஏற்படுத்தாமல், கோவில் திருப்பணிகளை மேற்கொண்டு மத சடங்குகள், மரபுகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும்.
விரைவில் கோவிலின் பெருமையை மீட்டெடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வாகக் குழு மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. நிர்வாகக் குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், அனைத்து அரசுத் துறை அதிகாரிகளும் வழங்க வேண்டும். கோவிலின் கனகசபையில் நின்று அனைத்து பக்தர்களும் தரிசனம் செய்யவும், தேவாரம், திருவாசகம் பாடவும் சம வாய்ப்பு வழங்குவதை நிர்வாகக் குழு உறுதிசெய்ய வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தை கண்காணிக்க நிர்வாக குழுவை அமைத்த ஐகோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தீட்சிதர்கள் தரப்பில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.