தலைமைத்தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வருகை தேர்தல் அதிகாரி தகவல்

நாடாளுமன்ற தேர்தல் ஆயத்தப் பணிகளை பார்வை யிட இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தமிழகம் வர இருப்பதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தெரிவித்துள்ளார்.
தலைமைத்தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வருகை தேர்தல் அதிகாரி தகவல்
Published on

சென்னை,

சென்னை தலைமைச் செயலகத்தில் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தேர்தலை நியாயமாகவும், அமைதியாகவும் நடத்தி முடிக்க தேவையான எல்லா நடவடிக்கைகளையும் தேர்தல் கமிஷன் தொடர்ந்து எடுத்து வருகிறது. தேர்தல் பணிகளை கவனிப்பதற்காக ஏற்கனவே கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக பாலாஜி, ராஜாராமன் ஆகிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக பிரதீப் ஜேக்கப், மணிகண்டன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றும் அரசு அலுவலர்களை இடமாற்றம் செய்ய தமிழக அரசுக்கு 15-ந் தேதிவரை (நேற்று) வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்கள் தொடர்பான விவரங்களை தமிழக அரசிடம் இருந்து பெற்று, வரும் 22-ந் தேதி இந்திய தேர்தல் கமிஷனுக்கு அது தொடர்பான அறிக்கை அளிக்கப்படும்.

நாடாளுமன்ற தேர்தலை யொட்டி பள்ளி, கல்லூரிகளின் தேர்வு நடக்கும் தேதிகள் பற்றிய விவரங்கள் கோரப்பட்டுள்ளன. அந்தத் தகவல்கள் கிடைத்ததும் அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைப்போம்.

தேர்தல் பணிகளை ஆய்வு செய்ய இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா விரைவில் தமிழகம் வர இருக்கிறார்.

அப்போது மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், தலைமைச் செயலாளர், டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் அவர் ஆலோசனை நடத்துவார்.

நாடாளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 18 தொகுதிகள் மற்றும் திருவாரூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளது.

திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி தேர்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளது. அங்கும் தேர்தல் நடத்துவது குறித்து உரிய நேரத்தில் தேர்தல் கமிஷன் அறிவிப்பு வெளியிடும். ஓசூர் தொகுதி தொடர்பான தகவல் இன்னும் சட்டசபை செயலகத்திடம் இருந்து வரவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com