நாடாளுமன்ற தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தி.மு.க. கோரிக்கை

நாடாளுமன்ற தேர்தல் நடக்கும்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு தி.மு.க. கோரிக்கை விடுத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின்போது திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தி.மு.க. கோரிக்கை
Published on

சென்னை,

இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு மற்றும் அதிகாரிகளுக்கு தி.மு.க. மாநில மருத்துவர் அணி துணைத்தலைவர் டாக்டர் பா.சரவணன் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.

அந்த 3 தொகுதிகள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இடைத்தேர்தல் நடத்த முடியவில்லை என கூறப்பட்டுள்ளது. சட்டப்படி இது சரியான காரணம் அல்ல.

தடை உத்தரவு இல்லை

திருப்பரங்குன்றத்தில் என்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ் பெற்ற வெற்றியை எதிர்த்து ஐகோர்ட்டில் நான் தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. அவர் 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 3-ந் தேதி இறந்துபோனார்.

அவரது இறப்பை தொடர்ந்து அந்த தொகுதி காலியாகிவிட்டது. நான் தொடர்ந்த வழக்கை திரும்பப்பெறுவதாக ஐகோர்ட்டில் எனது வக்கீல் 11-ந் தேதி (நேற்று) கடிதம் கொடுத்துள்ளார். அந்த தொகுதியில் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்று கோர்ட்டு தடை உத்தரவு பிறப்பிக்கவில்லை.

மக்களுக்கு அநீதி

தேர்தல் வழக்கு நிலுவையில் இருப்பதால், இடைத்தேர்தல் நடத்துவதற்கு தடையாக இருப்பதாக அதை காரணம் காட்ட முடியாது. தமிழக அரசு தனது தனிப்பெரும்பான்மையை இழந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், காலியாக உள்ள அனைத்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தாதது, அரசியல் சாசனத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம் துரோகம் செய்ததாக அமைந்துவிடும். அதோடு, அந்த தொகுதி மக்களுக்கு அநீதி செய்ததாகவும் ஆகிவிடும். எனவே நாடாளுமன்ற தேர்தலோடு, திருப்பரங்குன்றம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வாபஸ் கோரி மனு

இதற்கிடையே சென்னை ஐகோர்ட்டில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணனின் வக்கீல் அருண் ஆஜராகி, தேர்தல் வழக்கை காரணம் காட்டி, ஐகோர்ட்டு மீது பொறுப்பை சுமத்தி திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிக்கு தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. எனவே, இந்த தேர்தல் வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை பரிசீலிப்பதாக நீதிபதி கூறினார். பின்னர் நேற்று மாலையில், தேர்தல் வழக்கை திரும்பப்பெறுவதாக கூறி டாக்டர் சரவணன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com