சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்றி வைத்தார்.
சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

நாட்டின் 74-வது சுதந்திர தினம் இன்று (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை காரின் முன்னாலும், பின்னாலும் சென்னை காவல்துறையினரின் மோட்டார் சைக்கிள்கள் புடைசூழ அழைத்து வந்தனர்.

கோட்டை கொத்தளத்தின் முன்பாக இருக்கும் அணிவகுப்பு மரியாதை ஏற்கும் மேடை அருகே முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 8.33 மணிக்கு வந்திறங்கினார். அங்கு அவருக்கு பூங்கொத்து கொடுத்து தலைமைச் செயலாளர் கே.சண்முகம் வரவேற்றார்.

அங்கிருந்த தென்னிந்திய பகுதிகளின் தலைமைப் படைத் தலைவர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை அதிகாரி, தாம்பரம் விமானப்படைத் தளம் விமானப்படை அதிகாரி, கிழக்கு மண்டல கடலோரக் காவல்படை இன்ஸ்பெக்டர் ஜெனரல், தமிழக டி.ஜி.பி. ஜே.கே.திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டி.ஜி.பி. (சட்டம் - ஒழுங்கு) கே.ஜெயந்த் முரளி ஆகியோரை மரபுப்படி முதல்-அமைச்சருக்கு தலைமைச் செயலாளர் அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதல்-அமைச்சரை தலைமைச் செயலாளர் மேடைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திறந்த ஜீப்பில் ஏறிச் சென்று, போலீஸ் அணிவகுப்பை பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து 8.45 மணிக்கு கோட்டை கொத்தளத்துக்கு முதல்-அமைச்சர் வந்த எடப்பாடி பழனிசாமி அங்கிருந்தபடி மூவர்ண தேசியக் கொடியை அவர் ஏற்றி வைத்தார். மூவர்ண பலூன்கள் அப்போது பறக்கவிடப்பட்டன. மேலும், போலீஸ் இசை வாத்தியக் குழுவினர் தேசிய கீதத்தை இசைத்தனர். இதனை தொடர்ந்து சுதந்திர தின உரையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தற்போது நிகழ்த்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com