மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Published on

சென்னை,

உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில், இந்தியாவில் அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இடைஇடையே பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தாலும், இன்னும் ஊரடங்கு தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

தமிழ்நாட்டில், நாள் ஒன்றுக்கு சராசரியாக 85 ஆயிரம் பேர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை அதிகரிக்க திட்டமிடப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்தும், மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும் விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது, தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தநிலையில், மினி கிளினிக் திட்டத்தை முதலமைச்சர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி இன்று தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக சென்னையில் 47 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன. தமிழகம் முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக்குகள் அமைக்கப்படுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகம் முழுவதும் 630 கிளினிக்குகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருகின்றன.

இந்த நிகழ்ச்சியில் துணை-முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலமை செயலாளர் சண்முகம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த மினி கிளினிக்குகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும். கிராமப்புறங்களில் மட்டும் மாலை 7 மணி வரை திறந்திருக்கும். இந்த மினி கிளினிக்கில் ஒரு டாக்டர், ஒரு நர்சு, ஒரு மருத்துவ பணியாளர்கள் இருப்பார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com