

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கோபி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு தீபாவளி போனஸ் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது எப்போது என்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவர், நேற்று பள்ளிகள் திறப்பு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகம் முழுவதும் 45 சதவீத பெற்றோர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவித்தார். பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து நாளை முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார் என்றும் கூறினார்.
இதனையடுத்து நீட் தேர்வுக்கு பயிற்சி பெற ஆன்லைனில் விண்ணப்பித்த 16,300 அரசு மாணவர்களுக்கு நேற்று முதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்கள்கள் அரசு பள்ளியில் சேர்ந்துள்ளதாக அவர் கூறினார். பள்ளிகளில் சீருடைகள் தயாராக உள்ளதகாவும், மாணவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.