

சென்னை,
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதல-அமைச்சர் ச.ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியான அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் இன்று (31.05.2026) காலை 10.30 மணியளவில் அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோவில் தேர்த்திருவிழாவின்போது தேரின் சக்கரத்திற்கும் அருகிலிருந்த சுவற்றிற்கும் இடையே எதிர்பாராதவிதமாக சிக்கிக்கொண்ட ஹர்ஷவர்தன் (வயது 18), த/பெ.கோவிந்தராஜா, என்பவர் பலத்த காயம் ஏற்பட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர் உயிரிழந்து விட்டார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சஷ்டிகன் (வயது 19). த/பெ.கௌரிசங்கர் என்பவருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஐந்து லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.