முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ரூ.6 கோடி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ரூ.6 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது.
முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு கூட்டுறவு வங்கிகளின் சார்பில் ரூ.6 கோடி எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கப்பட்டது
Published on

சென்னை,

கஜா புயலால் பாதிப்படைந்த மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பல்வேறு தரப்பினர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, நிதி அளித்து வருகின்றனர்.

அந்தவகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, கூட்டுறவு வங்கிகளின் சார்பில் பொது நல நிதியில் இருந்து ரூ.6 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

சாய் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் கே.வி.ரமணி முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர் கே.பி.அன்பழகன், சாய் பல்கலைக்கழகத்தின் நிதி மேலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் பால சுப்பிரமணியன், அலுவலர்கள் ரவி, பிரசாந்த் ஆகியோர் உடன் இருந்தனர்.

முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, சவிதா பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் என்.எம்.வீரையன் ரூ.1 கோடிக்கான காசோலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினார். சவிதா பொறியியல் கல்லூரி இயக்குனர் எஸ்.ராஜேஷ், சவிதா பல் மருத்துவமனையின் பொதுமேலாளர் எஸ்.தங்கபாண்டி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் என்.ராஜேந்திரன், தமிழ்நாடு அரசின் தொழில் வணிகத்துறையின் கீழ் செயல்படும் சகோசெர்வ் தலைவர் தமிழ்மணி ஆகியோர் முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தலா ரூ.20 லட்சத்திற்கான காசோலையை வழங்கினர்.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய ஊழியர்கள் சார்பாக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ஒரு நாள் சம்பளம் ரூ.10,85,356-க்கான காசோலையை மேலாண்மை இயக்குனர் சண்முகம் வழங்கினார். இந்த நிகழ்வில் அரசு முதன்மை செயலாளர் கிருஷ்ணன், தலைமை பொறியாளர் வெ.சுப்பிரமணியன் ஆகியோர் பங்கேற்றனர்.

நாகூர் தர்கா நிர்வாகிகள் கே.அலாவுதீன், எஸ்.எப்.அக்பர் ஆகியோர் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. திருவாடுதுரை ஆதீனம் சார்பில் ரூ.10 லட்சத்திற்கான காசோலை முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆதீனத்தின் பொது மேலாளர் தெய்வசிகாமணி, பொறியாளர் மணிகண்டன், சதீஷ்குமார், மோகன்ராஜ், ராம் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com