முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணத் தொகை கேட்க டெல்லி செல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி தாக்கு

அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் வெள்ள பாதிப்பை குறைத்திருக்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் நிவாரணத் தொகை கேட்க டெல்லி செல்லவில்லை: எடப்பாடி பழனிசாமி தாக்கு
Published on

நெல்லை,

நெல்லையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் நெல்லை பாளையங்கோட்டை பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த 600 பேருக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

மழை பாதிப்பு தொடர்பாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருந்தால் பாதிப்பை குறைத்து இருக்கலாம். 4 மாவட்ட மக்கள் மழையால் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நடவடிக்கை எடுத்து இருந்தால் மழை நீர் தேங்கியிருக்காது. மழை பாதிப்பால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்க வேண்டும்.

தூத்துக்குடியில் ஏற்கனவே 85 சதவிகித மழை நீர் வடிகால் பணிகள் நிறைவு பெற்றிருந்தன. இரண்டரை ஆண்டுகளில் எஞ்சிய 15 சதவிகித பணிகளை திமுக அரசு முடிக்கவில்லை. வெள்ளத்தால் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு உதவி வழங்க வேண்டும். மழை பாதித்த மாவட்டங்களில் மக்கள் உணவு இன்றி தவித்து வருகின்றனர். மழை பாதிப்பை ஆய்வு செய்யாமல் எப்படி நிவாரண தொகை கேட்க முடியும். இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவே மு.க ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். நாட்டை பற்றியே கவலைப்படாத முதல்-அமைச்சர்தான் மு.க ஸ்டாலின்.குடிமராமத்து திட்டத்தை திமுக அரசு கைவிட்டுவிட்டது. அதனால் தான் கனமழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன"

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com