ராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு திடலையும் முதல்-அமைச்சர் திறந்துவைத்தார்.
ராமநாதபுரம் சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டிடங்களை திறந்துவைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (12.08.2024) தலைமைச் செயலகத்தில், சட்டத்துறை சார்பில் இராமநாதபுரம் அரசு சட்டக் கல்லூரியில் 76 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடம், திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூர், சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 1 கோடியே 57 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடல் ஆகியவற்றை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், குதக்கோட்டை கிராமத்தில் 1,76,549 சதுர அடி பரப்பளவில் 76 கோடியே 60 இலட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள இராமநாதபுரம் அரசு சட்டக்கல்லூரிக்கான புதிய கட்டடம் மற்றும் விடுதிக் கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இப்புதிய கட்டடமானது, 26 வகுப்பறைகள், கருத்தரங்குக்கூடம், காணொளி காட்சி அறை, உள்விளையாட்டு அரங்கம், சர்வதேச தரத்தில் மாதிரி நீதிமன்ற அரங்கம், நிர்வாகத் தொகுதிக் கட்டடங்கள், அதிவேக இணைய வசதிகளுடன் கூடிய கம்பியில்லா மண்டலம் அடங்கிய நூலகக் கட்டடங்கள், டால்பி டிஜிட்டல் ஒலிப்பெருக்கியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய கலையரங்கம், விடுதி காப்பாளர் அறை, 250 மாணவியர்கள் தங்கும் வசதி கொண்ட விடுதிக் கட்டடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வு தளம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளன.

2022-2023- ஆண்டிற்கான சட்டத்துறை மானியக் கோரிக்கையில், திருவள்ளூர் மாவட்டம், பட்டறைப்பெரும்புதூரில் உள்ள சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் விளையாட்டுத் திடல் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி வளாகத்தில் 1 கோடியே 57 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள கால்பந்து மற்றும் மட்டைப்பந்து விளையாட்டுத் திடலை தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்."

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com