கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நேற்று பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
கவர்னர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய 5 மாநிலங்க ளுக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில் மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்தபோஸ் தனது பதவியை நேற்று முன் தினம் திடீரென ராஜினாமா செய்தார். இது, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்புக்கு மத்தியில், அவருக்கு பதிலாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டு மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு வங்காள கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதை அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவின் மூலம் உறுதி செய்தார்.

இதேபோன்று, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் அமித்ஷா தொலைபேசியில் பேசி உள்ளார். அப்போது தமிழக கவர்னர் மாற்றம் குறித்தும், புதிய கவர்னர் விரைவில் நியமனம் செய்யப்படுவார் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி, கேரள மாநில கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தமிழக பொறுப்பு கவர்னராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி நேற்று முன் தினம் இரவு உத்தரவு பிறப்பித்தார்.

ஆர்.என்.ரவி, கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தமிழக கவர்னராக பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றது முதல் தி.மு.க. அரசுக்கும். கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில், கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து தங்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றது.

தி.மு.க. அரசுக்கும், கவர்னருக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்படும் போதெல்லாம் ஆர்.என்.ரவியை இடமாற்றம் செய்ய வேண்டும் என அமைச்சர்கள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். கவர்னர் மாளிகை முன்பு கூட்டணி கட்சியினர் போராட்டமும் நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் மேற்கு வங்காள கவர்னர் ஆனந்தபோசின் ராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். இதேபோன்று தெலுங்கானா, இமாசலபிரதேசம், லடாக், டெல்லி, மராட்டி யம், பீகார், நாகாலாந்து ஆகிய மாநிலங்களுக்கும் புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மக்கள் மாளிகையில் மரியாதை நிமித்தமாக கவர்னர் ஆர்.என்.ரவியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார். மேற்குவங்காள கவர்னராக, ஆர்.என்.ரவி மாற்றப்பட்ட நிலையில் இந்த சந்திப்பு நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நேற்று பதவியேற்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியையும் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com