உளுந்தூர்பேட்டை காலணி தொழிற்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

உளுந்தூர்பேட்டை காலணி தொழிற்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
உளுந்தூர்பேட்டை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வெள்ளிக்கிழமை) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.2,302 கோடி மதிப்பில் சுமார் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் காலணி உற்பத்திக்கான ஆலையை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆலை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இதையடுத்து நண்பகல் 12 மணியளவில் ரூ.139.41 கோடியில் கட்டப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதைத்தொடர்ந்து அருகில் நடைபெறும் அரசு விழா மேடைக்கு செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.100 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரம் செலவில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 2,525 திட்ட பணிகளை திறந்து வைத்து, ரூ.386 கோடியே 48 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பீட்டிலான 62 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.






