62 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

62 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வாயிலாக 23 மீன்துறை சார் ஆய்வாளர், 12 உதவியாளர் மற்றும் 3 இளநிலை கணக்காளர் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 38 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தொழிற்நுட்பர் (இயக்குபவர்) பணியிடத்திற்கு 15 நபர்களும், விரிவாக்க அலுவலர் நிலை-1 பணியிடத்திற்கு 3 நபர்களும், என மொத்தம் 18 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். நியமனம் செய்யப்பட்ட 18 நபர்கள் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் மாவட்ட உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களில் பணிபுரிவர்.
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் சிறப்பு நியமனம் அடிப்படையில் 2 உதவிப் பேராசிரியர், 1 பண்ணை மேலாளர், 3 குறிப்பான், என மொத்தம் 6 பேருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். ஆக மொத்தம் 62 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வின்போது, மீன்வளம் - மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைச் செயலாளர் டாக்டர் ந. சுப்பையன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் க.வீ. முரளீதரன், பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத் துறை ஆணையர் / ஆவின் நிர்வாக இயக்குநர் ஆ.அண்ணாதுரை. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் துணை வேந்தர் (பொறுப்பு) முனைவர் இர. நரேந்திரபாபு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






