பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

புழல் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
Published on

சென்னை,

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் விடுதலை கோரும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் உள்ளது. இதற்கிடையில் பேரறிவாளனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு உயர்நீதிமன்றம் சில முறை பரோல் வழங்கியுள்ளது.

இந்நிலையில், நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இந்த பெருந்தொற்றால் சிறைக்கைதிகள் பாதிக்கப்படாமல் இருக்க, அவர்களுக்கு அவசியம் ஏற்பட்டால் பரோல் வழங்கவும் கோரிக்கை வலுத்து வருகிறது.

அந்த வகையில், சிறையில் உள்ள பேரறிவாளன் நீரிழிவு மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே, பேரறிவாளன் உடல் நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டும் அவருக்கு நீண்ட விடுப்பு வழங்கிட வேண்டும் என, அவரது தாயார் அற்புதம்மாள் நேற்று (மே 18) முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் பரோல் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் அற்புதம்மாள் தமிழக அரசுக்குக் கோரிக்கை அளித்திருந்தார்.

அந்தக் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு, உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்.

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com