

கொடைக்கானல்,
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 23-ந்தேதி நடந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து ஒருமாத காலமாக தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட பிரதான கட்சிகளுடன், மற்ற அரசியல் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட னர். முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சென்று வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார். வாக்குப்பதிவு முடிந்த நிலையில் அடுத்த மாதம் (மே) 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
இந்தநிலையில் தேர்தல் முடிவடைந்ததை அடுத்து தொடர் பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது மனைவி துர்கா ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு நேற்று சென்றார். கொடைக்கானல் நகர்ப்பகுதியிலும் அவரை ஏராளமான பொதுமக்கள், தி.மு.க.வினர் பூங்கொத்துகள் கொடுத்தும், புத்தகங்கள் மற்றும் சால்வை வழங்கியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது மு.க.ஸ்டாலின் காரில் இருந்தபடி பொதுமக்களையும், கட்சியினரையும் பார்த்து கையசைத்தபடி சென்றார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் நேற்று மதியம் 3 மணி அளவில் நட்சத்திர ஓட்டலுக்கு சென்றனர். அவர்கள் ஒருவார காலத்துக்கு தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக ஓட்டல் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கொடைக்கானல் நட்சத்திர ஏரி சுற்றுச்சாலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், இளைஞர்கள் என பலரும் ஆர்வத்துடன் முதல்-அமைச்சருடன் செல்பி, புகைப்படம் எடுத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.