1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள்: இன்று தொடங்கி வைக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்.
சென்னை,
தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) திறந்து வைக்கிறார். சென்னையில் நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கிறார். இந்த மருந்தகங்களில் குறைந்த விலையில் ஜெனரிக் மற்றும் பிற மருந்து, மாத்திரைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் ஜெனரிக் மருந்துகளும், பிற மருந்துகளும் குறைந்தவிலையில் மக்களுக்கு கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க பி.பார்ம் அல்லது டி.பார்ம் படிப்பை முடித்து சான்று பெற்றவர்கள் அல்லது அவர்களது ஒப்புதலுடன் மருந்தகம் அமைக்க விரும்புபவர்கள் விண்ணப்பிக்கலாம் என கூட்டுறவுத்துறை அறிவித்தது.
இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் முதல்வர் மருந்தகம் அமைக்க 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதன்படி, தமிழகத்தில் முதற்கட்டமாக 1,000 மருந்தகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது கூட்டுறவு சங்கம் மூலம் 500 மருந்தகங்களும், தொழில் முனைவோர் மூலம் 500 மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் மருந்தகங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் 33 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இங்கு, பிரதமரின் மக்கள் மருந்தகம் உள்பட எந்த மருந்தகங்களிலும் இல்லாத வைகயில் மலிவான விலையில் தரமான மருந்துகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் 1,000 முதல்வர் மருந்தகங்களை திறந்து வைக்கும் வகையில், சென்னை பாண்டி பஜாரில் கூட்டுறவுத்துறை மூலம் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைத்து மருந்து விற்பனையை தொடங்கி வைக்கிறார். இதன்பின்பு கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சிலும் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.
முன்னதாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன், "முதல்வர் மருந்தகத்தை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (இன்று) திறந்து வைக்கிறார். நடுத்தர மக்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் மருத்துவ செலவு அதிகமாக உள்ள நிலையில் அதை குறைக்கும் விதமாக முதல்கட்டமாக ஆயிரம் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.
அதன் பின்னர் முதல்வர் மருந்தகங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். முதல்வர் மருந்தகம் திறப்பதற்க்கு 3 லட்சம் வரை அரசு மானியமாக வழங்குகிறது. நடுத்தர மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டு மருந்துகள் குறைந்த விலையில் வழங்கப்படும்.
மருந்துகளை ஆய்வு செய்து தரமான மருந்துகள் மக்களுக்கு வழங்கப்படும். ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் தொடங்க இருப்பதன்படி, 75 சதவீதம் அளவுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும். உதாரணத்திற்கு தனியார் மருந்தகங்களில் ரூ.70-க்கு கிடைக்கும் மாத்திரை, முதல்வர் மருந்தகத்தில் வெறும் ரூ.11 மட்டுமே கிடைக்கும்.
மாநில பட்டியலில் கல்வியும் சுகாதாரமும் இருந்தால் தான் மக்களுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கும். தனியார் மருத்துவமனைகளில் ஜெனரிக் மருந்துகளை எழுதாமல், பிராண்டட் மருந்துகளை எழுதும் முறையை பின்பற்றி வருகிறோம். ஆகவே தமிழ்நாடு அரசு மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை சரி செய்ய தற்போது ஜெனரிக் மருந்துகள் விற்பனை செய்யும் வகையில் முதல்வர் மருந்தகங்களை தொடங்கப்படுகிறது.
முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டாலும் அ.தி.மு.க. ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா மருந்தகங்கள் மூடப்படாது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எந்த ஆட்சியில் கொண்டுவந்தாலும் அவை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். மக்கள் நலன் சார்ந்த ஒரு திட்டத்தை மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளில் முதல்வர் மருந்தகம் திறப்பதில் தவறு ஏதும் இல்லை" என்று அவர் தெரிவித்திருந்தார்.






