முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரிட்டாபட்டி செல்கிறார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா அரிட்டாபட்டியில் இன்று நடக்கிறது.
மதுரை,
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி, நரசிங்கம்பட்டி, அ.வல்லாளபட்டி உள்பட பல்வேறு கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கரில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் விட்டு இருந்தது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மேலூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, அங்கிருந்து மக்கள் வெளியேறும் நிலை ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தினர்.
இந்த நிலையில் டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்த அரிட்டாபட்டி கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி, சட்டசபையிலும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து ஒருமனதாக நிறைவேற்றினார். அப்போது, நான் முதல்-அமைச்சராக இருக்கும் வரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் வராது என உறுதி அளித்தார்.
இந்த நிலையில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மதுரைக்கு நான்கு வழிச்சாலை வழியாக பேரணியாக நடந்து வந்து போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. இதனை தொடர்ந்து, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது. இதனால் அரிட்டாபட்டி பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த வெற்றியை பட்டாசு வெடித்தும், ஆட்டம் பாட்டத்துடனும் கொண்டாடினர்.
இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்யக்கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள் பிரதிநிதிகள் 18 பேர், அமைச்சர் மூர்த்தியுடன் நேற்று சென்னைக்கு சென்றனர். அங்கு முதல்-அமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்து, அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளபட்டிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்தனர்.
அதனை ஏற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு, மதுரைக்கு பகல் 1 மணிக்கு வருகிறார். மதுரை மாவட்ட தி.மு.க. சார்பில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் தொண்டர்கள் திரண்டு வந்து முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். தொடர்ந்து. அங்கிருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில், அரிட்டாபட்டிக்கு சென்று மக்களை சந்தித்து பேசுகிறார். அ.வல்லாளபட்டியில் நடக்கும் நன்றி தெரிவிப்பு விழாவிலும் முதல்-அமைச்சர் பேச உள்ளார்.






