முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: புதுப்பொலிவுடன் காட்சி தரும் கல்லணை


முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்: புதுப்பொலிவுடன் காட்சி தரும் கல்லணை
x

கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

தஞ்சை,

தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் விவசாய பாசனத்துக்கு முக்கிய நீர் ஆதாரமாக திகழ்வது கல்லணை. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் திருச்சி முக்கொம்பு அணையை தாண்டி கல்லணைக்கு வந்து சேரும். இங்கிருந்து தண்ணீர் காவிரி, வெண்ணாறு, வெட்டாறு, கொள்ளிடம், புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய் ஆகியவற்றுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டால் தான் டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடியை சிரமமின்றி மேற்கொள்ள முடியும். விவசாயிகள் எதிர்பார்த்தபடி இந்த ஆண்டு குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில் கல்லணையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கிறார். தண்ணீர் திறந்து விடும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ரகுபதி, மெய்யநாதன், டி.ஆர்.பி.ராஜா, தஞ்சை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நீர்வளஆதாரத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர். தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி கல்லணை புதுப்பொலிவுடன் காட்சி தருகிறது.

முதல்-அமைச்சர் வருகையை முன்னிட்டு கல்லணையில் தூய்மைப்படுத்தும் பணிகள், வர்ணம் பூசும் பணிகள் மிக தீவிரமாக நடந்தன. கல்லணை கால்வாய் தலைப்பு பகுதியில் இறுதி கட்டத்தை எட்டியுள்ள புனரமைப்பு பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர். கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் பாலங்கள் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன.

கல்லணை பாலங்களில் அமைந்துள்ள மாமன்னன் கரிகாலன், ஆங்கில பொறியாளர் ஆர்டர் காட்டன், காவிரி அம்மன், அகத்தியர், மாமன்னன் ராஜராஜன், விவசாயி, மீன் பிடிக்கும் தொழிலாளி ஆகிய சிலைகள் புது வண்ண பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கின்றன. கல்லணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக பூஜை செய்யப்படும் கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வெளியேறும் மதகு பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோவில், உள்பகுதியில் அமைந்துள்ள கருப்பண்ணசாமி கோவில், பூங்காவில் அமைந்துள்ள விநாயகர் கோவில் ஆகிய கோவில்கள் புது வர்ணம் பூசப்பட்டு புதிய தண்ணீரை எதிர்நோக்கி காத்திருக்கின்றன.

முதல்-அமைச்சர் வருகையையொட்டி கல்லணைக்கு வரும் சாலைகள், அதில் அமைந்துள்ள பாலங்கள் மீது வெள்ளையடிக்கப்பட்டு, புத்தம்புதிது போல காட்சி அளிக்கின்றன.

1 More update

Next Story