

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந் தேதி நடக்கிறது. மே 4-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 234 தொகுதிகளில் மொத்தம் 4,023 வேட்பாளர்கள் களத்தில் நிற்கின்றனர். தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், த.வெ.க. என 4 முனை போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால், அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் வீதி, வீதியாக பிரசாரம் நடந்து வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.வெ.க. தலைவர் விஜய் ஆகியோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 5 மணியுடன் ஓய்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அதேபோல் எடப்பாடி பழனிசாமி சேலம் எடப்பாடி தொகுதியிலும், விஜய் சென்னை நந்தனத்திலும் பிரசாரத்தை நிறைவு செய்கிறார்கள்.
இந்த நிலையில், சென்னை அண்ணா நகரில் உள்ள டவர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த தொகுதி திமுக வேட்பாளர் சிற்றரசை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பூங்காவில் கூடியிருந்த மக்கள் முதல்-அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் முதல்-அமைச்சருடன் பொதுமக்கள் ஆர்வமாக செல்பி புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
இதைபோல சென்னை மதுரவாயல் தொகுதி வேட்பாளர் காரப்பாக்கம் கணபதியை ஆதரித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் விருகம்பாக்கம் தொகுதி தி.மு.க.வேட்பாளர் பிராபகர் ராஜாவை ஆதரித்து முதல்-அமைச்சர் வாக்கு சேகரித்தார்.
மேலும் கலைஞர் கருணாநிதி நகரில் நடந்து சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின்போது முதல்-அமைச்சருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.