அரசியல் ஆதாயத்துக்காகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் பயணம் - எடப்பாடி பழனிசாமி


அரசியல் ஆதாயத்துக்காகவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் பயணம் - எடப்பாடி பழனிசாமி
x

மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தருமபுரி,

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொகுதி வாரியாக பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி தர்மபுரி மாவட்டத்தில் அவர் தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் சட்டசபை தொகுதிகளில் நேற்று தனது சூறாவளி பிரசாரத்தை தொடங்கினார். இந்தநிலையில், தருமபுரி பாலக்கோட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தில் பேசுவதற்கு முன் ஒரு முறை கண்ணாடியைப் பார்த்திருக்கலாம். அத்தனை கேள்வியும் அவரைப் பார்த்து அவரே கேட்க வேண்டியது.கச்சத்தீவைப் பற்றி பேச இவருக்கு என்ன தகுதி இருக்கிறது? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியில் 39 எம்.பி.க்களை வைத்துக்கொண்டு, நாடாளுமன்றத்தில் பேசாமல், இப்போது வந்து நீலிக்கண்ணீர் வடிக்கும் உங்கள் நாடகத்தை மக்கள் நம்பத் தயாராக இல்லை.

கச்சத்தீவைத் தாரை வார்த்தவர் உங்கள் தந்தை கருணாநிதி. அன்று மத்தியில் ஆட்சியில் இருந்தது, இன்று நீங்கள் கைகோர்த்து நிற்கும் காங்கிரஸ் கட்சி. கச்சத்தீவு பற்றி சண்டை போடவேண்டும் என்றால், உங்கள் கூட்டணிக்குள்ளேயே சண்டை போட்டுக்கொள்ளுங்கள்

கச்சத்தீவு பற்றி பேச முதல்-அமைச்சர் ஸ்டாலினுக்கு தகுதியில்லை. மத்தியில் காங்கிரஸ், மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரை வார்க்கப்பட்டது.16 ஆண்டுகள் மத்தியில் ஆட்சி, அதிகாரத்தில் பங்குவகித்த திமுகவுக்கு கச்சத்தீவு பற்றி பேச என்ன அருகதை இருக்கிறது; அப்போது மீனவர்களின் கஷ்டம் தெரியவில்லையா?கச்சத்தீவு பற்றி பேச திமுகவுக்கு தகுதியில்லை. அதை பறிகொடுத்தது திமுக ஆட்சியில் தான். கச்சத்தீவை மீட்க சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் ஜெயலலிதா. காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்து பதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது பேச திமுகவுக்கு அருகதை இல்லை. 68 பேர் இறந்தபோது கள்ளக்குறிச்சி செல்லாத முதல்-அமைச்சர் உடனே கரூர் செல்கிறார். எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறது திமுக.

கரூர் கூட்ட நெரில் ஏற்பட்ட போது அவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் ஏன் வந்தார்கள்? இவர்கள் எல்லாம் ஏன் அப்போது அங்கே செல்லவில்லை? இது அரசியல் தானே? என்று வீராவேசமாகப் பேசும் முதல்-அமைச்சரே..

நான் கேட்கிறேன்- கரூருக்கு ஓடோடி சென்ற நீங்கள், கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? வேங்கைவயலுக்கு ஏன் செல்லவில்லை? ஏர் ஷோ-வில் உயிரிழந்தோர் வீட்டுக்கு ஏன் செல்லவில்லை? அப்போது நீங்கள் செய்வது அரசியல் இல்லாமல், அவியலா? சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால்தான் முதல்-அமைச்சர் ஸ்டாலின் கரூர் சென்றார்.ஆட்சி நிர்வாகத்தில் தோல்விநிதி நிர்வாகத்தில் தோல்விசட்டம் ஒழுங்கைக் காப்பதில் தோல்விபெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்விபோதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி விலைவாசியைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி.

பழனிசாமிக்கு கொள்கை இல்லை என ஸ்டாலின் பேசுகிறார். முதலில் திமுகவுக்கு கொள்கை இருகிறதா? இந்தியா கூட்டணி மூலம் பாஜகவை எதிர்ப்பது, மாநிலங்களில் மோதிக்கொள்வது என இருக்கிறார்கள். எல்லா தேர்தலிலும் ஒரே மாதிரி போட்டியிட வேண்டும். அதுதான் கொள்கையுடைய கட்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story