இரண்டு நாள் பயணமாக ராமநாதபுரம் செல்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திட்டப்பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், ராமநாதபுரம் புதிய பஸ் நிலையத்தையும் திறந்து வைக்கிறார்.
ராமநாதபுரம்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த ஆய்வு பயணத்தின் போது முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வருகிறார்.
அந்த வகையில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 29, 30 ஆகிய தேதிகளில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக வருகிற 29-ந் தேதி மாலை பரமக்குடிக்கு செல்லும் முதல்-அமைச்சர் கட்சி நிர்வாகிகளை சந்திப்பதோடு, ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடத்துகிறார்.
தொடர்ந்து ராமநாதபுரம் செல்லும் அவர் ராமநாதபுரத்திலும் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்திக்கிறார். பின்னர் இரவு ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
மறுநாள் 30-ந் தேதி காலை ராமநாதபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்கிறார். தொடர்ந்து ராமநாதபுரம் அருகே புல்லங்குடி பகுதியில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
குறிப்பாக ராமநாதபுரத்தில் ரூ.20 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய பஸ் நிலைய கட்டிடத்தையும் திறந்து வைக்க உள்ளார். முதல்-அமைச்சரின் இந்த திட்ட பயணம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.






