

சென்னை,
சென்னை அரசினர் தோட்டத்தில் இன்றைய ஓமந்தூரார் வளாகத்தில் அந்நாளில் இருந்த பாலர் அரங்கத்தை புதுப்பித்து, ‘கலைவாணர் அரங்கம்’ என அதற்கு பெயர் சூட்டியவர் கலைஞர். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை ஜி.என்.செட்டி சாலை - திருமலைப்பிள்ளை சாலை சந்திப்பில் 1999-ம் ஆண்டில் மேம்பாலம் கட்டப்பட்டபோது சாலை ஓரத்தில் இடம் மாற்றி அமைக்கப்பட்டது.
அந்த இடத்தில் இருந்த கலைவாணரின் சிலையை கலைவாணர் அரங்க வளாகத்தினுள் மாற்றியமைக்குமாறு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்தனர். கலைவாணர் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் அமைந்திருந்த சிலையை புதுப்பித்து சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த என்.எஸ்.கிருஷ்ணன் புகைப்படத்திற்கு முதல்-அமைச்சர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.