2 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவி... முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை கள்ளக்குறிச்சி செல்கிறார்

மணலூர்பேட்டையில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.
சென்னை,
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகத்தின் பயன்பாட்டிற்காக, கள்ளக்குறிச்சியை அடுத்த வீரசோழபுரத்தில் 38.15 ஏக்கரில் ரூ.139 கோடியே 41 லட்சம் மதிப்பில் 8 தளங்களை கொண்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இந்த கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளை (வெள்ளிக்கிழமை) கள்ளக்குறிச்சிக்கு வருகை தர உள்ளார்.
இதையொட்டி நாளை காலை சென்னையில் இருந்து கார் மூலம் வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தியாகதுருகம் அடுத்த திம்மலையில் தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதை தொடர்ந்து கள்ளக்குறிச்சி ஏமப்பேரில் நிறுவப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் மு.கருணாநிதியின் வெண்கல சிலையையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து வீரசோழபுரம் செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தை திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து அதன் அருகே நடைபெறும் விழாவில் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.341 கோடியே 77 லட்சம் மதிப்பில் முடிவுற்ற 2,559 பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். மேலும் ரூ.386 கோடியே 48 லட்சம் மதிப்பில் 62 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து 2 லட்சத்து 16 ஆயிரத்து 56 பயனாளிகளுக்கு ரூ.1,045 கோடியே 41 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் மணலூர்பேட்டை செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி முன்னேற்பாடு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
பின்னர் அங்கிருந்து திருவண்ணாமலைக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு நாளை மறுநாள் முதல்-அமைச்சர் கள் ஆய்வு செய்கிறார். செய்யாறு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி அருகில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 27-ந் தேதி திறந்து வைக்க உள்ளார். தொடர்ந்து நவீன தொழில் நுட்பங்கள், புதிய ரகங்கள் குறித்த வேளாண் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
நவீன தொழில்நுட்பங்கள், புதிய ரகங்கள், வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டும் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வை விவசாயிகள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உணவு பதப்படுத்துபவர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடக்கிறது.






