தி.மு.க. தொகுதி பார்வையாளர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, சமூக வலைத்தளத்தை கண்காணிப்பது போன்ற அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் 2026-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இதை எதிர்கொள்ளும் வகையில், ஆளுங்கட்சியான தி.மு.க. பல்வேறு முன்னேற்பாடுகளை கடந்த பல மாதங்களாகவே செய்து வருகிறது. மக்களவை தேர்தல் முடிந்ததுமே, சட்டசபை தேர்தலுக்காக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய தேர்தல் பணி ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக மாற்றங்கள் செய்வது குறித்தும், தேர்தல் பணிகள் குறித்தும் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை அழைத்து இக்குழுவினர் ஆலோசனை நடத்தினர். தேர்தல் பணிகள் குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களையும் வழங்கினர். பின்னர், பல்வேறு அணிகளின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி, தேர்தலின்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தினர். இதுதவிர, தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக உள்ள மாவட்டங்களை பிரித்து கூடுதல் மாவட்டங்களை உருவாக்குவது, அதற்கு நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. சட்டசபை தொகுதிகளின் பார்வையாளர்கள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். வரும் 2026 சட்டசபை தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக 234 தொகுதிகளுக்கும் நியமிக்கப்பட்ட பார்வையாளர்களுடன் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவது, சமூக வலைத்தளத்தை கண்காணிப்பது மற்றும் அடுத்து செய்யவேண்டிய பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com