

திருச்சி,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர்கள் நேரடியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
ஆளும் கட்சியான அ.தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிகடந்த 19-ந்தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த தொகுதியில் பிரசாரம் தொடங்கினார்.
இதையடுத்து அ.தி.மு.க.வின் பிரசாரம் முறைப்படி 27-ந்தேதி தொடங்கியது. சென்னையில் நடந்த பிரசார தொடக்க நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் முன்னணி தலைவர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முதல் 6 நாட்கள் சூறாவளி பிரசாரத்தை நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கினார். அப்போது அவர் பொதுக்கூட்டம், வீடு, வீடாக வாக்காளர்களை சந்தித்தல், தொழில் அதிபர்கள், வியாபாரிகள், பிரமுகர்கள், பொதுமக்கள், விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மீனவர்களுடன் சந்திப்பு போன்ற நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். பிரசாரத்தின்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சாலையின் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று வரவேற்றனர்.
இந்த நிலையில் இன்று காலை (புதன் கிழமை) மீண்டும் நாமக்கல் சேந்தமங்கலம் சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 11.30 மணியளவில் திருச்சி மாவட்டத்துக்கு வருகை தந்தார். மாவட்ட எல்லையான மேய்க்கல் நாய்க்கன்பட்டியில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
முதலாவதாக அதிக அளவில் வாழை சாகுபடி நடைபெறும் திருச்சி தொட்டியம் பகுதியில் உள்ள வாழைத்தோட்டங்களை பார்வையிட்டு முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு செய்தார். மேலும் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார். பின்னர் பாக்கு தோட்டத்தை பார்வையிட்டு பண்ணைகளில் பணியாற்றும் விவசாயிகளை சந்தித்து பேசினார். அங்கிருந்து கண்ணனூர் சென்ற அவர் கிராம விவசாயிகளை சந்தித்து பேசி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.