

தூத்துக்குடி,
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனால் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மாவட்டம் தோறும் தீவிர தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தற்போது 6-வது கட்ட தேர்தல் பிரசாரத்தை அவர் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் அன்று காலை 10.15 மணிக்கு வாகைகுளம் விமான நிலையத்துக்கு வருகிறார். அங்கு அவருக்கு அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
தொடர்ந்து காலை 11 மணிக்கு ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். 12 மணிக்கு திருச்செந்தூரில் மகளிர் குழு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். மதியம் 1 மணிக்கு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி மாப்பிள்ளையூரணியில் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். மாலை 6 மணிக்கு தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.
அதனை தொடர்ந்து 18-ந் தேதி நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட பழைய பஸ் நிலையம் பகுதியில் பொதுக்கூட்டம். அதனை தொடர்ந்து நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் கலந்துரையாடல், தொடர்ந்து அம்பாசமுத்திரத்தில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல்.
மாலை 4 மணிக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடல், 5.10 மணிக்கு பாவூர்சத்திரத்தில் பொதுக்கூட்டம். 6.30 மணிக்கு தென்காசி இசக்கி மஹாலில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடல்.
19-ந் தேதி காலை 10 மணிக்கு கடையநல்லூர் பள்ளிவாசல் அருகே பொதுக்கூட்டம். வாசுதேவ நல்லூரில் மகளிர் குழுவுடன் கலந்துரையாடல், சங்கரன்கோவிலில் இளைஞர் பாசறை-இளம் பெண்கள் பாசறை தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வதால் வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ, தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.