

சென்னை,
வங்கக் கடலின் தெற்குப் பகுதியில் உண்டான நிவர் புயல் நேற்றிரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 வரை முழுவதுமாக கரையை கடந்துவிட்டது. நிவர் புயல் அதிதீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வலுவிழந்து தீவிரப் புயலாகவே கரையைக் கடந்தது. புயல் கரையை கடந்த நேரத்தில் புதுச்சேரி உள்பட சில பகுதிகளில் மணிக்கு 120 முதல் 140 கி.மீ. வரையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
இதனை தொடர்ந்து, நிவர் புயல் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது. தற்போது நிலப்பரப்புக்குள் நகர்ந்து வரும் நிவர் புயல் படிப்படியாக வலுவிழந்து வருகிறது.
இந்நிலையில் புயல் பாதிப்புகளை நேரில் பார்வையிட இன்று பிற்பகல் 2.30 மணி அளவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடலூர் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடலூரில் நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்வதால் தண்ணீர் தேங்கி உள்ளது. மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.