தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரையில் முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்
Published on

மதுரை,

இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்துள்ள கோவிஷில்டு என்ற கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த தடுப்பூசியை மத்திய அரசு அதிக அளவில் கொள்முதல் செய்து ஒவ்வொரு மாநிலங்களுக்கும் அனுப்பி உள்ளது. நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலமாக இன்று தொடங்கி வைத்தார்.

இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில முதலமைச்சர்கள் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்கள். அந்த வகையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் 14 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. கோவையில் 4, மதுரையில் 5, திருச்சி 5, சேலத்தில் 7 மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தில் முதல் தடுப்பூசி அரசு மருத்துவர் செந்திலுக்கு போடப்பட்டது. அதனை தொடர்ந்து மருத்துவ, சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்த பின் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவாக செயல்படுத்தியதற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி 2 கட்டங்களாக போடப்படும் எனவும் முதல் தடுப்பூசிக்கு பிறகு 28 நாட்கள் கழித்து 2வது தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com