திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

திருமூர்த்தி அணையில் இருந்து வருகின்ற 28-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

"திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறந்து விடக் கோரி பரம்பிக்குளம் ஆழியாறு திட்ட பாலாறு படுகை விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டல பாசனப் பகுதிகளுக்கு வரும் 28 ஆம் தேதி முதல் மொத்தம் 8,700 மி.கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சூலூர் வட்டங்கள் மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், திருப்பூர், காங்கேயம், தாராபுரம் வட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com