ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்

ஈரோடு மாவட்டத்தில் நாளை (புதன்கிழமை) முதல் 2 நாட்கள் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்கள் மற்றும் பொதுமக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் முதலமைச்சர் பழனிசாமி சுற்றுப்பயணம்
Published on

ஈரோடு,

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். வருகிற சட்டப்பேரவை தேர்தலுக்கு அ.தி.மு.க.வுக்கு வெற்றித்தேடி தரும் வகையில் அவர் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். பல்வேறு அமைப்புகள், பொதுமக்களையும் அவர் சந்தித்து வருவதுடன், அரசு நலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (புதன்கிழமை) தொடங்குகிறார். பவானியில் காலை 9 மணிக்கு அவர் பிரசாரத்தை தொடங்குகிறார். அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. பின்னர் காலை 10 மணிக்கு கே.எம்.பி. மகாலில் சிறு-குறு தொழில் முனைவோருடன் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

பகல் 11 மணிக்கு பருவாச்சி செல்லும் முதல்- அமைச்சருக்கு அந்த பகுதி அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளிக்கிறார்கள். பகல் 12 மணிக்கு அந்தியூரில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு வாரி மகாலில் வன்னியர் சமுதாயத்தினர் மற்றும் வெற்றிலைக்கொடி விவசாயிகளுடன் முதல்-அமைச்சர் சந்தித்து பேசுகிறார். மதியம் 1 மணிக்கு அத்தாணியில் வரவேற்பு நிகழ்ச்சியும், 1.30 மணிக்கு கள்ளிப்பட்டியில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

மதிய உணவுக்கு பின்னர், பிற்பகல் 3.30 மணிக்கு டி.என்.பாளையம் நால்ரோடு பகுதியில் அ.தி.மு.க.வினர் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து சத்தியமங்கலம் செல்லும் முதல்-அமைச்சருக்கு மாலை 4 மணிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மாலை 4.45 மணிக்கு நல்லூர் ஈ.பி.பி. மகாலில் வேட்டுவ கவுண்டர் சமுயத்தினருடன் முதல்-அமைச்சர் கலந்துரையாடுகிறார். மாலை 5.30 மணிக்கு புஞ்சைபுளியம்பட்டி பஸ் நிலையம் அருகில் வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அங்குள்ள காந்திநகர் பகுதியில் அருந்ததியர் மக்களுடன்சந்திப்பு நிகழ்ச்சி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

இரவு 7 மணிக்கு முதல்-அமைச்சர் நம்பியூர் வருகிறார். அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு கோபி வரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஈரோடு புறப்படும் அவர் அங்கு ஓய்வு எடுக்கிறார்.

7-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8.30 மணிக்கு 2-வது நாள் சுற்றுப்பயணத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்குகிறார். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அவருக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். காலை 8.45 மணிக்கு ஈரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெறும் அரசு திட்டங்கள் திறப்பு விழா மற்றும் புதிய திட்டங்கள் அடிக்கல்நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.

காலை 9.30 மணிக்கு ஈரோடு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்துக்கு செல்லும் அவர் அலுவலகத்தை பார்வையிட்டு, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் பகல் 11 மணிக்கு ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

அங்கிருந்து புறப்பட்டு செல்லும் அவருக்கு பகல் 12 மணிக்கு சித்தோட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் முத்துமகாலில் பகல் 12.30 மணிக்கு தொழில் முனைவோர், வக்கீல்கள், டாக்டர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார். மதிய உணவுக்கு பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஊத்துக்குளி செல்கிறார். அங்கு அவருக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு அளிக்கிறார்கள்.

குன்னத்தூர் சாணார்பாளையம் பகுதியில் 3 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் நாடார் சமுதாயத்தினருடன் முதல்-அமைச்சர் பேசுகிறார். அங்கிருந்து பெருந்துறை வரும் முதல்-அமைச்சர் சேனிடோரியம் கலைமகள் திருமண மண்டபத்தில் கைத்தறி, விசைத்தறி தொழில் முனைவோர் மற்றும் சமுதாய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பெருந்துறையில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5 மணிக்கு வெள்ளோட்டில் முதல்-அமைச்சருக்கு வரவேற்பு நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு அவல்பூந்துறையில் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. மாலை 6 மணிக்கு அறச்சலூர் செல்லும் முதல்-அமைச்சருக்கு அங்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் சிவசக்தி திருமண மண்டபத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் மகளிர் குழுவினருடன் முதல்-அமைச்சர் சந்தித்து பேசுகிறார். மாலை 6.30 மணிக்கு ஓடாநிலையில் தீரன் சின்னமலை சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடக்கிறது. அங்கு மஞ்சள் விவசாயிகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

இவ்வாறு 2 நாட்கள் சுற்றுப்பயணம் நடக்கிறது.

முதல்-அமைச்சர் வருகை மற்றும் சுற்றுப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில் ஈரோடு புறநகர் மாவட்ட செயலாளர், அமைச்சர் கே.சி.கருப்பணன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com